ஸ்ரீஸ்ரீஸ்ரீபைரவர் வரலாறு பற்றிய ஆய்வுமுடிவுகள்


 

கடந்த 3000 ஆண்டுகளாக உலகெங்கும் இருக்கும் இந்துக்கள்,இஸ்லாமியர்கள்,கிறித்தவர்கள்,புத்தர்கள்,சீக்கியர்கள் மற்றும் சைவ & வைணவ மார்க்கத்தினரால் பல்வேறு பெயர்களில் இன்றுவரை நேரடியாகவும்,மறைமுகமாகவும் செய்யப்படும் வழிபாடு ஸ்ரீஸ்ரீபைரவர் வழிபாடு ஆகும்.சிவனின் அம்சங்களில் ஒருவர் ஸ்ரீபைரவர் ஆவார்.

சிவனின் அம்சம் என்பதும் மூர்த்தம் என்பதும் ஒன்றாகும்.அவதாரம் என்பது இறைவனே மனிதனாகப் பிறந்து வளர்ந்து நல்லது செய்வதாகும்.அந்த காலகட்டத்தில் அக்கடவுள் வாழும் உலகத்தில் அந்த கடவுளின் இடம் காலியாக இருக்கும்;மூர்த்தம் என்பது அப்படியல்ல;எங்கும் அந்த இறைவன் இருப்பவர்;அப்படிப்பட்ட மூர்த்தமே ஸ்ரீஸ்ரீஸ்ரீபைரவர் ஆவார்.

 

 

நைமிசாரண்யம் என்பது வடபாரதத்தில் இருக்கும் ஒரு புண்ணிய ஸ்தலம் ஆகும்.ஒளிமயமான சிவபெருமானே பரம் பொருள் என்று உணர்ந்த பல ஆயிரக்கணக்கான முனிவர்கள் அத்திருத்தலத்தில் வாழ்ந்து வந்தார்கள்.சூட்சுமமாக இன்றும் வாழ்ந்து வருகிறார்கள்;திருமேனி முழுவதும் திருவெண்ணீறு பூசி,திரிபுண்டரமணிந்து,அக்கமாலை சூட்டி சிவதியானத்தில் மூழ்கியவாறு,வேத ஆகமங்களால் இந்த முனிவர்கள் சிவனை துதித்து வாழ்ந்து வந்தனர்.சூட்சுமமாக இன்றும் வாழ்ந்து,வழிபட்டு வருகின்றனர்.

 

 

ஒரு சமயம் சூதபுராணிகர் நைமிசாரண்ணியத்திற்கு எழுந்தருளினார்.அங்கிருந்த முனிவர்கள், “தாங்களைத்துன்புறச் செய்யும் இடுக்கண் களைந்து இஷ்ட சித்தி அருளும் அறுபத்து நான்கு மூர்த்தமாகிய சிவபராக்கிரமத்தை விளக்கிக் கூற வேண்டுகிறேன்” என்று கேட்டுக்கொண்டார்கள்.அதனை, “ஒரு வகையாக உங்களுக்கு விவரிக்கிறேன்”என்றவாறு சிவபராக்கிரமப் புகழைக் கூறலானார்.

 

 

சிவபராக்கிரமம் என்பதும் அட்டாட்ட விக்கிரக லீலை என்பதும் சிவபிரான் அறுபத்து நான்கு திருவுருவமந்து அடியார்களுக்கு அருள் செய்த திருவிளையாடல் எனப்படும் இவ்விக்கிரக லீலையை வேதாகம புராணங்களும் வேதம் தியானம் ரூபமாகவும்,ஆகமம் அதனை விரித்து உருவத் திருமேனியில் அடியவர்கள் வழிபட்டு உய்யும் பொருட்டுக் கிரியா உருவமாகவும்,புராணங்கள் அவ்வாறு வழிபட்டுப் பேறு பெற்றோர் இவரெனக்குக் கதை வடிவமாகவும் கூறுகின்றன.

அறுபத்து நான்கு மூர்த்தங்களுக்குரிய சிறப்பான அறுபத்து நான்கு கோவில்கள் எங்குள்ளன? அங்கு எப்படி வழிபட வேண்டும்;அந்த அறுபத்து நான்கு மூர்த்தங்களுக்கும் என்னென்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் எனவும்,எவ்வகையில் நமக்கு நன்மை கிடைக்கும் எனவும்  புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.ஆன்மீக சொற்பொழிவாளர்கள்கள்,ஆன்மீக ஆர்வலர்கள்,சிவ சிந்தையுள்ளவர்கள்,சோதிடர்கள் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இந்த அட்டவீரட்டானக் கோவில்கள்(ஸ்ரீஸ்ரீஸ்ரீபைரவரின் படைவீடுகள்) அமைந்திருக்கின்றன.

 

 

திருமூலர் காலத்திற்கு முன்பு ஆறு சமயங்கள் வழக்கில் இருந்துள்ளன.1) பாசுபதம் 2) மாவிரதம்(மஹாவ்ரதம்) 3)காபாலம்(காளம்);4)வாமம்(சாக்தேயம்) 5)பைரவம்(வைரவம்) 6)ஐக்கிய வாத சைவம் என்பனவே அச்சமயங்களாகும்.

 

‘காபாலிகம்’ பாசுபத சமயம் போல மிகவும் பழமையான ஒன்றாகும்.இக்கொள்கையை ‘காலம்’ எனும் தத்துவத்தில் உருவாக்கியவர் உருத்திரர் ஆவார்.உடம்பெல்லாம் திருநீறு பூசி,தலைமாலை அணியும் சமயத்தவர்கள் காபாலிகர்.சாம்பலை உடலில் பூசிக்கொள்ளுதல்,பைரவர் வழிபாடு ஆகியவை அவர்களுக்கு மகிழ்ச்சி கொடுப்பதாக எண்ணினார். காபாலிக மதமும் பைரவ மதமும் கிட்டத்தட்ட ஒன்றுபோல தோன்றும்.பைரவ சமயக் கொள்கை என்பது பைரவரே பரம்பொருள் என்றும் அவரடியிற் சேருவதே வீடுபேறு என்பதும் ஆகும்.உயிர்களுக்குப் பந்தமும் வீடும் பைரவக்கடவுளிடமிருந்து எட்டுத்தலைகள் தோன்றி அளிக்கும்.இவர்கள் கொள்கை போக மார்க்கமே முக்தியைத் தரும்.இவர்களுக்கு நரபலி இடுதல்,மண்டையோட்டில் உணவருந்துதல்,மது அருந்துதல் பழக்கமுண்டு. படைவீரர்கள் தலைகளை அரிந்து கொற்றவையையும் பைரவக்கடவுளையும் வழிபட்டனர் என்றும் பைரவி மந்திரத்தைச் செபம் செய்தனர் என்றும் தமிழ்ப்புலவர் ஒட்டக்கூத்தர் தமது தக்கயாகப் பரணியில் கூறியிருக்கிறார்.

 

 

நல்லவை தோன்றும்போது அல்லவையும் சேரத்தான் செய்யும்.பைரவ வழிபாடு எங்கும் பரவியிருந்த சமயம் சிலரின் வன்னிலை வழிபாடும்,பைரவ வழிபாட்டுடன் சேர்ந்தது.அமைதி வாழ்க்கை மேற்கொள்ள விரும்பிய சைவ சமயத்தினர்,இவ்வன்னிலை வழிபாட்டை ஒதுக்கத் துவங்கினர்.சாதி சமய வேறுபாடின்றி அனைவரும் பைரவத்தில் சேரலாம். அனைவரும் பைரவக் கடவுளின் முன்பு சமமே என்ற பைரவ மதத்தின் கொள்கை,சில குறிப்பிட்ட சாதியினருக்குப் பிடிக்கவில்லை;

 

 

வன் நிலை வழிபாட்டினை மட்டும் ஒதுக்கிவிட்டுச் சிறந்திருந்த பைரவ வழிபாட்டினை மட்டும் சுத்தசைவ முறைப்படி தொடர்ந்திருக்கலாம் என்பது எமது கருத்தாகும்.

காசியில் வழிபாட்டுமுறை செய்பவர்கள் பண்டாக்கள் என்னும் பண்டாரங்கள்.பழனியில் வாழும் பைரவருக்குப் பெயர் சுப்ரமணிய பைரவர் என பைரவர் அஷ்டோத்திரத்தில் வருகிறது.பழனியில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்புகூடப் பண்டாரங்கள் தான் வழிபாடு செய்து வந்தனர்.பிற்காலத்தில் சில மாறுதல்கள் ஏற்பட்டன.

 

 

தமிழ்நாட்டில் ஸ்ரீபைரவர் என்னும் கடவுளை வைரவர் எனவும் அழைக்கின்றனர்.இவரே கிராமக் காவல் தெய்வமாக நின்று தந்திர சாத்திரப்படி பலி ஏற்கின்றார்.மேலும் இவர் கோவில்களில் காவல் தெய்வமாக இருந்து ஆகமசாத்திரப்படி பூசையும் நைவேத்தியமும் பெறுகிறார்.முதலில் தொடங்கும் காலை பூசையும் இறுதியாக நடக்கும் இரவுபூசையும் இவருக்கே உரித்தானவை.பைரவருக்கெனத் தனியாகப் புராணம் இருப்பதாகத் தெரியவில்லை;ஆனால்,பல்வேறு புராணங்களில் இவர் பாடலால் பெருமை பெருகிறார்.

 

 

இலங்கையில் சிவன்மலை என்ற சிவன் ஒளி மலை உள்ளது.இம்மலையின் உச்சியில் சூரியன் உதயமாகும் காலத்தில் வானவில்லின் நிறமுடைய ஒளி தோன்றுகிறது.இச்சிவவழிபாடே சில இடங்களில் பைரவ வழிபாடாக மாறியது.இலங்கையில் பல்வேறு இடங்களில்  இவரே ஸ்ரீபைரவராக வணங்கப்படுகிறார்.உலகக் காவல் தெய்வமும் மக்கள் வணங்கிய உடனே பலன் வழங்குபவரும் ஸ்ரீஸ்ரீஸ்ரீபைரவரே!!!

 

 

பெண்களும் கோழைகளும் பைரவ உபாசனை செய்யக்கூடாது என்பது பண்டைய பெரியோர்களின் கருத்து.பக்தி வழியில் சாதிமத வேறுபாடு இல்லாமல் யார் வேண்டுமானாலும் வணங்கலாம்.அந்தக் காலத்தில் முள்ளுபாதிரிக்குச்சியைக் கையில் வைத்துக்கொண்டு ஸ்ரீஸ்ரீஸ்ரீபைரவர் கோவிலின் முகப்பில் அமர்ந்து குறி சொல்வார்களாம். “பைரவ”ராகம் என்ற ஓர் ராகம் உண்டு.பலிபீடத்திற்கு அபிஷேகம் நடக்கும்போது பைரவ ராகம் நாதஸ்வரத்தில் வாசிப்பார்கள்.பைரவருக்குண்டான பொது காயத்ரி மந்திரம் ஜெபம் செய்தும் அவர் அருள் பெறலாம்.

 

ஸ்ரீஸ்ரீஸ்ரீபைரவர் காயத்ரி மந்திரம்

 

 

சுவாநந் வஜாய வித்மஹே

சூலஹஸ்தாய தீ மஹி

தந்நோ பைரவ; ப்ரசோதயாத்

இருளை நீக்கி ஒளியைத் தருபவர்;திரிசூலம் அவருக்கே உண்டான சிறப்பான ஆயுதம்.திரிசூலத்தை மனக்கண்ணினால் எண்ணினாலே போதும்.நம் பயம் மற்றும் இக்கட்டான நிலையிலிருந்து ஸ்ரீஸ்ரீஸ்ரீபைரவர் நம்மைக் காப்பாற்றுவார்.முற்காலத்தில் வீட்டில் பைரவர் சிலை வைக்கமாட்டார்கள்.சுவரில் மஞ்சள் பொடி அல்லது குங்குமத்தால் திரிசூலம் போட்டு அதன்முன் குத்துவிளக்கு வைத்து வழிபடுவர்.அதுவும் ஸ்ரீபைரவருக்குண்டான வழிபாடுதான்.கிராமக் காவல்தெய்வமும் அவரே.கோவில் திறந்த உடனும்,கோவில் நடை இரவில் சாத்தப்படும் பொழுதும் இருநேர பூஜையை அவர் ஏற்கிறார்.

 

 

எதிரிகள் விலக மகா பைரவரை வணங்க வேண்டும்.உலக இயக்கத்தைத் தம்பனம் செய்ய உரிய பைரவரை வழிபாடு செய்ய வேண்டும்.அபிசாரப் பிரயோகத்தையும் பூர்வஜென்ம தோஷத்தையும் நீக்க ஸ்ரீகால பைரவரின் அருள் வேண்டும். புதையல் இருக்கும் இடம் காட்ட,குறி சொல்ல ஸ்ரீபீஷண பைரவர்  அனுசரணை வேண்டும்.எதிர்த்து வரும் எதிரியைப் பைத்தியம் பிடிக்கச் செய்பவர் ஸ்ரீஉன்மத்த பைரவர் ஆவார்.நம் ஆயுளை நீட்டிக்கச் செய்பவர் ஸ்ரீகால பைரவரே!வீட்டில் வைத்து வணங்கத்தக்கவர் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்தான்!!!

 

 

யோக மார்க்கத்தையும் ஞான மார்க்கத்தையும் விரும்புவோர் ஸ்ரீபைரவ காயத்ரியை ஜெபித்து யோக பைரவரையும் ஆகாச பைரவரையும் வழிபடலாம்.ஒரு மனிதனுக்குள் சூட்சுமமாக இருந்து அவனுக்குத் தைரியத்தைக் கொடுக்கும் காவல்தெய்வம் ஸ்ரீபைரவரே!

 

 

ஸ்கந்த புராணத்தில் எட்டுவகையான பைரவர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.1.தண்டபாணி,2.விக்ராந்தன்  3.மகா பைரவர் 4.படுக்கன் 5.பாலகன் 6.நந்தி 7.கால பைரவர் 8.சேத்திர பாலன் என அவர்கள் அழைக்கப்படுவார்கள்.

 

பைரவர் தமது அம்சமாக எட்டுப் பைரவர்களைப் படைத்தார் என்று தந்திரசாரா என்னும் நூல் கூறுகிறது. அவை 1.அசிதாங்க பைரவர் 2.ரூரு பைரவர் 3.சண்ட பைரவர் 4.குரோத பைரவர் 5.உன்மத்த பைரவர் 6.காபால பைரவர் 7.பீடண பைரவர்  8.சங்கார பைரவர்.

 

இலங்கையிலிருந்து வெளிவந்துள்ள ‘சிவபராக்கியம்’ என்னும் நூல் அஷ்ட பைரவர் என்னும் எட்டு பைரவர்கலைப் பற்றிக் கூறுகிறது.அதில் மற்ற நூல்களில் இருந்து சில பெயர்கள் வேறுபட்டு உள்ளன.

 

1.கால பைரவர்

2.கல்பாந்த பைரவர்

3.க்ரோதந பைரவர்

4.காபால பைரவர்

5.ஸம்ஹார பைரவர்

6.உந்மத்த பைரவர்

7.சண்ட பைரவர்

8.உக்ர பைரவர்

 

வாமன புராணம் வேறு வகையான எட்டுப்  பைரவர்களைப் பற்றிப் பேசுகிறது.சிவனுக்கும் அந்தகாசுரனுக்கும் நடந்த போரில் சிவனின் தலையிலிருந்து பெருக்கெடுத்து ரத்தம் எட்டு வடிவங்களைத் தாங்கியது.அந்த எட்டும்,எட்டு பைரவ வடிவங்களாக ஆயின எனக் கூறுகிறது.அவை:

 

1.வித்யா ராஜா

2.கால ராஜா

3.காமா ராஜா

4.சோம ராஜா

5.ஸ்வச்சந்தர ராஜா

6.லலிதா ராஜா

7.விக்ன ராஜா

8.சிவா

 

ஸ்ரீபைரவர் உபாசனை தங்க வியாபாரிகளுக்கும்,உயர்நிலை அதிகாரிகளுக்கும்,சிவபூஜகர்களுக்கும்,மடாதிபதிகளுக்கும் , காவல் துறை மற்றும் ராணுவத்துறை அதிகாரிகளுக்கும் அவசியமானது.காவல் துறை மற்றும் ராணுவத்துறை தவிர,இதர மக்கள் ஸ்ரீபைரவருக்கு சைவ உணவையே நிவேதனமாகப் படைக்க வேண்டும்.மது மாமிசம் என்பது கொட்டை நீக்கிய பேரீச்சம்பழமும்,தேனும் கலந்த கலவையாகும்.பக்தர்களுக்கு தினமும் பொற்காசுகளும்,பொன் தாம்பாளம்,புதையல்,அட்சயப் பாத்திரம் கொடுத்து ஆதரிப்பவரும் ஸ்ரீ சொர்ண பைரவரே!

 

இரவில் படுக்கப் போகும் முன்,கைகால் முகம் கழுவவேண்டும்.பின்னர்,வலது கை ஆள்காட்டிவிரலால் நெற்றியில்,மார்பில்,இடது புஜத்தில்,திரிசூலம் இட வேண்டும். வலது புஜத்தில்,இடது கை ஆள்காட்டி விரலால் திரிசூலம் இட வேண்டும்.இப்படிச் செய்துவிட்டுப் பின்னர் படுத்தால் துர் ஆவிகள் வராது.நல்ல உறக்கம் வரும்.

 

 

இந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் அறுபத்தி நான்கு பைரவர்களுக்கும் அப்பாற்பட்டவர்.ஒவ்வொரு வீட்டுப் பூசை அறையிலும்,ஒவ்வொரு வழிபாட்டுத்தலத்திலும்,ஒவ்வொரு நகைக்கடைகளிலும்,குறிப்பாக தங்கம் இருக்க வேண்டிய இடங்களிலும் இவரது படமும்,டாலரும் இருக்க வேண்டியதாகும்.மனதில் பயம் ஏற்படாது.வீட்டிலேயே பொன் மழை பொழியும்.

 

ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் கலர் படத்தினை பூசை அறையில் வடக்கு நோக்கி வைத்து வணங்குதல் வேண்டும்.படத்துக்கு காய்ந்த மலர்களையும்,செயற்கை மலர்களையும் அணிவித்தல் கூடாது.அன்று மலர்ந்த மல்லிகை,தாமரை போன்ற மலர்களை அணிவிக்கலாம்.பெரிய அளவுகளில் படங்களை மாட்டி வழிபடக்கூடாது.ஆகர்ஷண சக்தி அதிகம் என்பதால் நாம் அந்த சக்தியை தாங்கும் அளவுகளிலேயே உள்ள படங்களை வணங்க வேண்டும்.ஸ்ரீசொர்ண பைரவர் ஸ்டிக்கரை வீட்டின் பீரோவின் உள்ளே ஒட்டி வைத்துக் கொள்ளலாம்.

 

 

அலங்காரத்துக்காக வெளியே ஒட்டக் கூடாது.குறிப்பாக கார்,மோட்டார் பைக்கில் இவைகளிலும்,வீட்டின் அறைகளின் முகப்புகளிலும் ஒட்டக் கூடாது.ஸ்ரீசொர்ண பைரவர் நாணயத்தை வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் அல்லது தங்க நகை வைக்கும் இடத்தில் வைத்துக்கொள்ளலாம்.ஆண்கள் தமது சட்டைப்பைக்குள் அல்லது பர்ஸில் சிறிய அளவிலான ஸ்ரீசொர்ண பைரவர் படத்தையும்,பெண்கள் தமது கைப்பையிலும் வைத்துக் கொள்ளலாம்.(பெண்கள் மாதவிலக்கு நாட்களில் வைத்துக்கொள்ளக் கூடாது)

 

இந்த ஆன்மீக ஆராய்ச்சி முடிவுகளை நமக்காக ஆராய்ந்து கண்டறிந்தவர் திரு.சகஸ்ரவடுகர் அவர்களுக்கு  நன்றிகள்!!!

 

ஓம் சிவ சிவ ஓம் 

ஓம் சிவ சிவ ஓம் 

ஓம் சிவ சிவ ஓம் 

 

பைரவப் பெருமான் ஒரு அறிமுகம்!!!

 

உலகத்தில் ஏராளமான மதங்களும்,வழிபாட்டுமுறைகளும் இருக்கின்றன;ஆனால்,ஒவ்வொரு மதத்திலும் ஒரே ஒரு கடவுள்,ஒரே ஒரு மதப் புத்தகம்,ஒரே ஒரு வழிபாட்டுமுறை என்று மட்டுமே இருக்கிறது;நமது இந்து தர்மத்தைத் தவிர!

நமது இந்து தர்மத்தை நமது முன்னோர்கள் ஷண்மத வழிபாடு என்று வகுத்துள்ளனர்.ஆறு விதமான இறைவழிபாட்டுமுறைகளின் தொகுப்பே நமது இந்து தர்மம் என்பது இதற்கான சரியான விளக்கம் ஆகும்.

விநாயகரை வழிபடுபவர்களைக் கொண்ட வழிபாட்டுமுறைக்கு காணபத்தியம் என்று பெயர்;

 

முருகக்கடவுளை வழிபடுபவர்களை உடைய வழிபாட்டுமுறையை கவுமாரம் என்று அழைக்கிறோம்.

 

அம்மனை வழிபடும் முறைகளின் தொகுப்பே சாக்தம் ஆகும்.

சூரியனை வழிபடும் வழிபாட்டை சவுரம் என்கிறோம்.

 

விஷ்ணுவை வழிபடும் முறையை வைஷ்ணவம் என்கிறோம்.

 

 

சிவனை வழிபடும் வழிபாட்டுமுறைக்கு சைவம் என்று பெயர்.இந்த வழிபாட்டுமுறையானது உலகில் மனித இனம் நாகரீகமடைந்ததில் இருந்தே நடைமுறையில் இருக்கிறது.இன்று மற்ற மதங்களின் தலைமை பீடங்கள் இருக்கும் இடங்களில் கூட இந்த வழிபாடு இருந்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.இதையே கடந்த 20,00,000 ஆண்டுகளாக நமது சிவாலயங்களில் தென்னாடுடைய சிவனே போற்றி;எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று பாடி வருகிறோம்.

இந்த சிவவழிபாட்டின் ஒரு உட்பிரிவே பைரவ வழிபாடு ஆகும்.இந்த பைரவ வழிபாடு ஐந்து பெரும்பிரிவுகளைக் கொண்டிருந்தது.இந்த ஐந்து பெரும்பிரிவுகளில் நான்கு இன்றும் நமது பாரத தேசத்தில் ஆங்காங்கே வழிபாட்டுமுறையாக இருக்கின்றன.அவைகளை நம்மால் பின்பற்ற இயலாது;அவை:மாவிரதம்,காளாமுகம்,காபாலம்,பாசுபதம்,ஐக்கியவாத சைவம்.

 

இவைகள் பல கடுமையான கட்டுப்பாடுகளை நமது ஒரு பிறவி முழுவதும் பின்பற்ற வேண்டும்.சிறிது பின்பற்றுவதிலிருந்து நழுவினாலும்,இந்த வழிபாட்டுமுறையிலிருந்து நாமே விலகிவிடுவோம்.

 

பழமையான ரிக் வேதம்,அதர்வண வேதம்;உத்திர காரணாகமம்,பூர்வகாரணாகமம்,அஜிதாகமம்,சுப்ரபேதாகமம், அம்சுத்வேதாகமம்,மகுடாகமம்,ரெளரவாகமம் போன்ற ஆகமங்களிலும்,பல சாஸ்திர நூல்களிலும் பைரவ வரலாறு விரிவாக கூறப்பட்டுள்ளது.(ஆகமம் என்றால் சிவ வழிபாட்டுமுறைகளை எளிமையாகத் தெரிவிக்கும் புராதன நூல் என்று பெயர்;இதில் சிவாலயம் கட்டும் முறைகள்,வழிமுறைகளும் இருக்கும்)

 

ஜைன சமயத்தில் விஜயபத்ரர்,வீரபத்ரர்,மணி பத்ரர்,ஸ்ரீபைரவர்,அபராஜிதர் என்ற பெயர்களில் க்ஷேத்ரபாலகராக வழிபட்டனர்.96 வகையான பைரவர்கள் ஜைன சமயத்தில் உள்ளனர்.பவுத்த சமயத்தில் 84 வகையான வயிரவர்களும்,வாமம் அல்லது சாக்தத்தில் 64 வகை வைரவர்களும்,வைஷ்ணவத்தில் சக்கரத்தாழ்வார் உருவில் பைரவரையும்,கிருஸ்துவ சமயத்தில் நோவாஸ் ஆர்க் எனப்படுவது பிரளய காலத்தில்,க்ஷேத்திரபாலகரின் தோணியை ஒத்துள்ளது.செயிண்ட் மைக்கேல்,செயிண்ட் ஜார்ஜ் என கிருஸ்துவர்கள் வழிபடுவது ஸ்ரீபைரவருடன் ஒப்பிடக் கூடியவர்கள்.

 

சக்திகள்,தேவர்கள்,யோகினிகள்,சநகாதி முனிவர்கள்,கிங்கரர்கள்,சித்தர்கள் என அனனத்துத் தரப்பினரும் வழிபடும் தெய்வம் ஸ்ரீகால பைரவப் பெருமான் ஆவார்.

 

எங்கும் எதிலும்,நீக்கமற நிறைந்து நின்று,இந்த பிரபஞ்சத்தையும்,பஞ்சபூதங்களையும் சிருஷ்டித்து,உருவின்றி ஜோதியாக நிற்கும் சர்வேஸ்வரனின் முதல் மூர்த்தமே ஸ்ரீபைரவப் பெருமான்!!!

 

நம் குலதெய்வம்,நமது இஷ்ட தெய்வம்,நமது ஜாதகப்படி நமக்கு தற்போது நடைபெறும் திசை புக்தி அந்தரத்துக்குரிய தெய்வம் என்று எந்தக் கடவுளையும் நாம் வழிபட்டாலும்,அந்தக் கடவுள்களுக்கும்,ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபடுவதற்கும் ஒரே ஒரு வித்தியாசம் உண்டு.

 

நாம் எந்தக் கடவுளை வழிபட்டாலும்,அந்தக் கடவுளிடம் நாம் திரும்பத் திரும்ப வேண்டும் கோரிக்கை மட்டுமே நிறைவேறும்.

ஆனால்,ஸ்ரீகாலபைரவப் பெருமானை வழிபட்டால்,நமக்கு என்னென்ன குறைகள் உண்டோ அத்தனைக் குறைகளையும் தானாகவே நிறைவேறும்.நாம் ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபடும்போது அவரிடம் மறந்து போய் எதையாவது வேண்டிய மறந்து போனாலும்,அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை;மேலும்,முற்பிறவி வரையிலும் நாம் பழுத்த சிவனடியாராக இருந்தால் அல்லது ஏதாவது ஒரு சித்தரின் நேரடி சீடராக இருந்தால் மட்டுமே இப்பிறவியில் தொடர்ந்து ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபட வேண்டும்.

 

ஸ்ரீகால பைரவரும்,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவரும் ஒருவரே!

உங்களுக்கு கடுமையான சோகங்கள்,வேதனைகள்,சிக்கல்கள்,சிரமங்கள் இருந்தால் நீங்கள் முதலில் வழிபட வேண்டியது ஸ்ரீகால பைரவப் பெருமானையே! சில வருடங்கள்/மாதங்கள் ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபட்டப் பின்னர்,நீங்களாகவே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ வழிபாட்டிற்கு நகர்ந்துவிடுவீர்கள்.

 

 ஓம் சிவ சிவ ஓம் 

ஓம் சிவ சிவ ஓம் 

ஓம் சிவ சிவ ஓம்