ஆன்மீக அரசு

கடந்த 30 வருடங்களாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வரவேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,aanmigaarasoo@gmail.com. தொடர்புகொள்ள வேண்டும். இதில் மின்அஞ்சல் தவிர வேறு எந்தவிதமான கைபேசி எண் மற்றும் மின்அஞ்சல் முகவரியும் இல்லை என்று தெரிவித்துக்கொள்கிறேன்-சகஸ்ரவடுகர்

ஹேவிளம்பி ஆண்டின் சொர்ணாகர்ஷண கிரிவலம்-2017

Featured

ஓம் ஸ்ரீ மகா கணபதியே நமஹ ! 

 

 தென்னாடுடைய சிவனே போற்றி !!

 

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!

 

அண்ணாமலையுடனமர் உண்ணாமுலையம்மையே போற்றி !!!

 

அதென்ன சொர்ணாகர்ஷண கிரிவலம்?

 

 

நாம் விரும்பினாலும்,விரும்பாவிட்டாலும் நமது தினசரி வாழ்க்கைக்கு பணம் அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது, ஒரு நாளுக்கு 12 மணி நேரம் நாம் உழைத்தாலும்,நமது தேவைகளுக்கு ஏற்ப வருமானம் கிடைக்காமல் தவிப்பவர்களே நம்மில் அதிகம்;

 

இது போன்ற தெய்வீக ரகசியங்களை ஆன்மீகவாதிகள் அனைவருமே அல்லது பெரும்பாலானவர்கள் வலைப்பூ/இணையதளம் மூலமாக வெளியிடுகிறார்களா?

 

அப்படியே வெளியிட்டாலும்,உரிய தெய்வீக நிகழ்ச்சிகளை தாமே தலைமை தாங்கி நடத்துகிறார்களா?

 

இந்தப் பதிவினை வாசிக்கும்  நாம் ஒவ்வொருவரும் அவசியம் கலந்து கொள்ள வேண்டும்;இதனால்,நமக்கு நியாயமான முறையில் வர வேண்டிய சம்பள உயர்வு,பதவி உயர்வு,வராக் கடன்கள்,கிடைக்க வேண்டிய பூர்வீகச் சொத்து,நமது திறமைக்குரிய சம்பளம் தரும் வேலை அல்லது தொழிலில் நாம் எட்ட வேண்டிய  இலக்குகள்,நமது உழைப்புக்குரிய அங்கீகாரம் சித்தர்களின் ஆசியாலும்,அண்ணாமலையாரின் ஆசிர்வாதத்தாலும் நம்மை வந்து சேரும்.

 

 

 

பத்தாம் ஆண்டு  

 

 

இந்த வருடம் மிக முக்கியமானது ஏன் என்றால் நம் குரு ., பத்தாம் ஆண்டு கிரிவல நிகழ்ச்சியை  நிறைய இடர்களை கடந்து நம்மையும்., தன்னோடு இணைத்துக்கொண்டு    தென் மாநிலங்கள் முழுவதும் இருந்து ஏராளமான ஆன்மீக வாசக,வாசகிகளையும் ஒருசேர வழிநடத்த உள்ளார்கள். ஒவ்வொரு வருடமும், புதியவர்கள் மற்றும் பழையவர்கள் என நம் அன்பர்கள் நம் குரு இடைவிடாது பின் தொடர்ந்து வந்துள்ளார்கள். இப்படிக் கலந்து கொள்வதன்  மூலமாக,ஏராளமான வாசக,வாசகிகள் தமது நெருக்கடியான வாழ்க்கைச் சூழல்களிலிருந்து முழுமையாக விடுபட்டுள்ளனர்;விடுபட்டு வருகின்றனர்;

 

இன்று நிம்மதியாகவும்,பொருளாதாரத் தன்னிறைவோடும்,எந்த விதக் குறையின்றியும் வாழ்ந்து வருகிறார்கள்;

 

கிரிவலம்';

 

கிரிவலம் 14.12.17  வியாழன் அன்று  சரியாக அதிகாலை 7 மணியளவில் இரட்டை பிள்ளையார் கோவிலில் நமது குருநாதர் சகஸ்ரவடுகர் அவர்கள் முன்னிலையில் துவங்கும். நாம் அனைவரும் சரியாக 6.00 am  அளவில் ஒன்று திரள்வோம்.

 

? எதற்காக இந்த சொர்ணாகர்ஷண கிரிவல நாளில் பிங்க் அல்லது மஞ்சள் நிற ஆடை அணிந்து கிரிவலம் செல்ல வேண்டும்?

 

அண்ணாமலை கிரிவலம் செல்வதற்கே நமது முன்னோர்களின் ஆசியும்,நமது குல தெய்வத்தின் அருளும் தேவை;

 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிற ஆடையை அணிந்து கிரிவலம் செல்ல வேண்டும் என்ற தெய்வீக விதி இருக்கிறது.

 

இந்த மகத்தான நாளில்(14.12.17)வியாழக்கிழமை) நாம் பிங்க் அல்லது மஞ்சள் நிற ஆடை அணிந்து நமது குருநாதர் சகஸ்ரவடுகர் அவர்களின் தலைமையில் கிரிவலம் செல்வதால்,நமது கடுமையான கர்மவினைகள் கரைந்து காணாமல் போய்விடும்;இந்த கர்மவினைகளாலும்,சக ஊழியர்கள்/உடன்பழகுபவர்களின் பொறாமையாலும் பல வருடங்களாக நமது வருமான அளவு அதிகரிக்காமல் இருக்கும்;இந்த தடை நீங்கிவிடும்;பணரீதியான தன்னிறைவை எட்டியவர்கள்,இந்த கிரிவலத்தில் கலந்து கொண்டால்,அவர்கள் தமது ஆன்மீக முன்னேற்றத்தை அடுத்த கட்டத்திற்கு எட்டுவார்கள்;கடந்த ஒன்பது  ஆண்டுகளில் இந்த உண்மையை பல ஆன்மீக வாசக,வாசகிகள் உணர்ந்திருக்கிறார்கள்

 

 


? ஏன் முதல் நாளே(13.12.17 புதன்கிழமை) அண்ணாமலைக்கு வர வேண்டும்?

 

 

தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் இருப்பவர்கள் சில மணி நேரங்களில் அண்ணாமலையை வந்தடைய முடியும்;அதே சமயம்,தமிழ்நாட்டின் பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சரியான நேரத்தில் இந்த சொர்ணாகர்ஷண கிரிவலத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினால்,முதல் நாளே வந்து அண்ணாமலையில் தங்கிக் கொள்வது உத்தமம்.உதாரணமாக,திருநெல்வேலி,தேனி,இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அண்ணாமலைக்கு வந்தடைய குறைந்தது 16 மணி நேரம் பயணிக்க வேண்டியிருக்கிறது.

 

? அண்ணாமலையில் எங்கே தங்குவது? எனது குடும்பத்தில் இருந்து யாரெல்லாம் இந்த சொர்ணாகர்ஷண கிரிவலத்தில் கலந்து கொள்ளலாம்?

 

திரு அண்ணாமலையாரின் கோவில் பல கோடி வருடங்களாக இருந்து வருகிறது.அண்ணாமலையாரின் பெயரிலேயே இந்த ஊரும் இருக்கிறது.தவிர,மாவட்டத் தலைநகரமாகவும் இருக்கிறது.ஒவ்வொரு பவுர்ணமியன்றும் சுமாராக ஒரு லட்சம் பக்தர்கள் பவுர்ணமி கிரிவலத்துக்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்;இதனால்,இந்த ஊர் முழுவதும் மகான்களின் ஆசிரமங்கள்,மடங்கள்,திருமண மண்டபங்கள் என்று அமைக்கப்பட்டிருக்கின்றன;தவிர,தங்கும் விடுதிகளும் கோவிலைச் சுற்றிலும் ஏராளமாக இருக்கின்றன.நாள் வாடகை ரூ.100/-முதல் ரூ.5000/-வரைக்கு லாட்ஜ்களும்,நட்சத்திர விடுதிகளும் இருக்கின்றன; தாய்மார்கள் நான்காம் நாளாக இருந்தாலே கலந்து கொள்ளலாம்.

 

நமது குடும்பத்தில் யாரெல்லாம்  பக்தி உணர்வுடன் இருக்கிறார்களோ அவர்கள் அனைவரையும் அழைத்து வரலாம்;நமது இன்றைய பொருளாதாரச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும் இந்த விஷயத்தில் முடிவு எடுக்கலாம்.

 

? இட்லிதானம் செய்வது எப்படி?

 

 

இந்த ஹேவிளம்பி  வருடத்தில், துவாதசி திதி வரும் நாளில் சொர்ணாகர்ஷண கிரிவலநாள் அமைந்திருக்கிறது.இந்த நாளில் நாம் ஒவ்வொருவருமே காலையில் ஒருவர்,மதியம் ஒருவர்,இரவு ஒருவர் என்று அண்ணாமலையில் அன்னதானம் செய்வது நமது அனைத்து கஷ்டங்களையும் நீக்கிவிடும்;கிரிவலப் பயண நேரம் குறைந்த பட்சம் 4 மணி நேரம் ஆகும்;அதிக பட்சம் 6 முதல் 8 மணி நேரம் வரை ஆகும்

 

காலையிலும்,மதிய நேரத்திலும் கிரிவலப் பாதையில் நம்மால் எத்தனை சாதுக்களுக்கு இட்லி தானம் செய்ய முடியுமோ அத்தனை சாதுக்களுக்கு தானம் செய்வோம்;கூடவே,நல்லெண்ணெய் கலந்த எள்ளுப்பொடியை ஒவ்வொரு இட்லிதானத்துடனும் சேர்த்தே கொடுப்போம்;

 

கிரிவலப்பாதையிலும் சில உணவகங்கள் இருக்கின்றன;எனவே,மதிய நேரத்திற்கு கிரிவலப் பாதையில் மதிய நேர அன்னதானத்திற்கு உணவு வாங்கிக் கொள்ளலாம்;அல்லது குபேர லிங்கம் வந்ததும்,நம்மில் ஒரு சிலர் ஆட்டோவில் நகருக்குள் பயணித்து உணவுப் பொட்டலங்களை மொத்தமாக வாங்கிக் கொண்டு வந்தும் தானம் செய்யலாம்.

 

?எள்ளுப்பொடியைத் தயார் செய்வது எப்படி?

 

இன்றைய கால கட்டத்தில் மளிகைக்கடைகளில் ரெடிமேடாக எள்ளுப்பொடி கிடைக்கிறது;ஒருவர் ஐந்து இட்லிகள் சாப்பிடும் அளவுக்கு எள்ளுப்பொடியை ஒரு சிறு பையில் நிரப்பி அத்துடன் சுத்தமான நல்லெண்ணெயை கலந்து சிறு கயிற்றால் கட்டிக் கொண்டு வருவோம்;நாம் எத்தனை பேர்களுக்கு இட்லிதானம் செய்ய விரும்புகிறோமோ,அத்தனை பாலிதீன் பைகளில் எள்ளுப்பொடி+நல்லெண்ணெய் நிரப்பிக் கொண்டு வருவது அவசியம்.(நமது ஊர்களில் மதிய உணவுவாங்குவோம் அல்லவா? அதில் மோர் பாக்கெட் எப்படி கட்டப்பட்டிருக்கும்;அதே போல கட்டிக் கொண்டு வரவும்)

 

பாரம்பரியம் மாறாத ஏராளமான குடும்பங்கள் இன்றும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊர்களிலும் வாழ்ந்து வருகின்றன;அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வீட்டிலேயே தயார் செய்து கொண்டு வரலாம்;

 

தனித்து வாழ்ந்து வருபவர்கள்,வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் முதலில் சொன்ன யோசனையை நடைமுறைப்படுத்துவது போதுமானது;

 

(இட்லிப்பொடி என்பது உளுந்துப்பொடி என்பதை நினைவிற் கொள்க)

 

ஏன் இட்லியுடன் எள்+நல்லெண்ணெய் கலந்த கலவையை தானம் செய்ய வேண்டும்?

 

அது தெய்வீக ரகசியம்! நமது கர்மவினைகள் தீரும் ரகசியம் இதனுள் தான் புதைந்திருக்கிறது.நீங்கள் எங்கெல்லாமோ அன்னதானம் செய்திருப்பீர்கள்;அரிசி தானம்,கோதுமை தானம்,பழ தானம்,ஆடை தானம்,ருத்ராட்ச தானம்,விஷய தானம் செய்திருப்பீர்கள்.அதைவிடவும் மிகவும் சக்தி வாய்ந்தது இந்த கலவையுடன் இட்லி தானம் செய்வது!

 

இட்லி தானம் செய்வதற்கு எங்கே வாங்குவது?

 

13.12.17 புதன்கிழமையன்று மாலை நேரத்திற்குள் அண்ணமலைக்கு வந்துவிட்டாலே சரியான உணவகத்தை நம்மால் அடையாளம் கண்டு கொள்ள முடியும்.அங்கேயே கூட நாளைக் காலை எனக்கு ஐந்து இட்லிகள் கொண்ட பார்சல்கள் இத்தனை தேவை என்று கூட முன்பதிவு செய்து கொள்ளலாம்;

 

அண்ணாமலையில் ஒரு உணவகத்தில் ஒவ்வொரு வேளையும் சமையல் செய்து முடித்ததும்,அந்த உணவுகளின் முன்பாக சைவ முறைப்படி தேவாரம் முதலான பதிகங்கள் பாடியப்  பின்னரே பரிமாறுகிறார்கள்.இதனால்,அந்த உணவகத்தில் ஒவ்வொரு உணவுப் பொருளும்(இட்லி,தோசை,பொங்கல்,புளியோதரை,மதியம் முழு உணவு) மிகுந்த சுவையுடன் இருக்கிறது.

 

துவாதசி திதியும்,சுவாதி நட்சத்திரமும்,சொர்ணாகர்ஷண கிரிவலமும் சேர்ந்து ஒன்றாக வருவதால் நாம் செய்யும் இட்லி தானத்திற்கான பலன்கள் அடுத்த சில நாட்களிலேயே நம்மை வந்து சேரும்;சிலருக்கு மட்டும் சில வாரங்களில் வந்து சேரும்.

 

? நவதானியங்களையும்,டயமண்டு கற்கண்டையும் ஏன் வாங்க வேண்டும்?

 

 

நவக்கிரகங்களின் கதிர்வீச்சுக்களை ஈர்க்கும் ஆற்றல் நவதானியங்களுக்கு இருக்கின்றன;நமது கைகளால் நவதானியங்களை ஆதிசிவனின் பாதத்தில்  (அண்ணாமலை கிரிவலப் பாதையில்) தூவ வேண்டும்;நமது கைகள் பட்டு தூவுவதால்,அவைகள் நமது ஜாதகப்படி இருக்கும் கிரக தோஷங்களுடன் கிரிவலப்பாதையின் ஓரங்களில் மழை பொழிந்ததும் முளைக்கத் துவங்கும்;அவ்வாறு முளைக்கத் துவங்கியதுமே,நம்மைப் பிடித்திருந்த கிரகதோஷங்களை நாம்  தூவியிருந்த நவதானியங்கள் வாங்கிக்  கொள்ளும்; நாம் தினசரி வாழ்க்கையில் சிக்கல்கள் இன்றியும்,பிரச்னைகள் இல்லாமலும் நிம்மதியாக வாழத் துவங்குவோம்;

 

 இயற்கைஇனிப்பு, கற்கண்டு ஆகும்.அதை இன்றைய நவீன காலகட்டத்தில் மோல்டிங் மெஷின்கள் மூலமாகத் தயாரிக்கிறார்கள்;அதனால்,தற்போது கற்கண்டு வைரக்கல் வடிவிற்கு மாறிவிட்டது;இதையே டயமண்டு கற்கண்டு என்று அழைக்கிறோம்.

 

 

? நவதானியங்களையும்,டயமண்டு கற்கண்டையும் எங்கே வாங்குவது? எப்படித் தூவுவது?

 

 

13.12.17 புதன்கிழமை இரவு 9 மணிக்குள் அண்ணாமலையை நாம் வந்தடைந்து விட்டால்,அண்ணாமலையிலேயே நவதானியங்களையும்,டயமண்டு கற்கண்டுகளையும் வாங்கிக் கொள்ளலாம்.

 

சில பல வேலைகளால்,நம்மால் 14.12.17 வியாழக்கிழமை காலையில் நேரடியாக சொர்ணாகர்ஷண கிரிவலத்தில் கலந்து கொள்பவர்கள் அவரவர் ஊரிலிருந்தே இவைகளை வாங்கிக் கொண்டு வரவும்.

 

அக்னிலிங்கம் கிரிவலப்பாதையில் அமைந்திருக்கும் இரண்டாவது லிங்கம் ஆகும்;இதைக் கடந்ததும்,நகர்ப்பகுதி நிறைவடைந்துவிடும்;மலையும் காடும் சூழ்ந்த பகுதி துவங்கும்;இங்கிருந்து எட்டாவது லிங்கமான(தற்போது ஒன்பதாவது! சில ஆண்டுகளுக்கு முன்பு குபேர லிங்கத்திற்கு சற்று முன்பாக ஒரு வயல்வெளியில் சந்திர லிங்கம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது) ஈசான லிங்கம் வரையிலும் சாலையோரம் அமைந்திருக்கும் முட்புதர்களில் தூவ வேண்டும்;கொட்டக் கூடாது;இரு கைகளால் தூவிக் கொண்டு வருவது நன்று;சிறிது சிறிதாகத் தூவி வருவதே நன்று.

 

? கிரிவலத்தின் போது செருப்பு அணிந்து நடக்கலாமா?

 

செருப்பு அணியாமல் நடப்பதே நன்று.இதில் விதிவிலக்கும் உண்டு.மழைக்காலமாக இருப்பதால்,குடை,ரெயின்கோட்,(வயதானவர்கள்,நோய் உள்ளவர்கள்)உரிய மருந்துகளுடன் பயணிப்பது அவசியம்;

 

 


?கிரிவலத்தில் மட்டும் கலந்து கொள்ளலாமா?

 

 

 

 

கிரிவலம் மதியம் 2 மணிக்குள் நிறைவடைந்துவிடும்;பிறகு,மாலை  அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்மனையும் வழிபடலாம்,  அதில் கலந்து கொண்டு  ஓம் சிவ சிவ ஓம் என்ற மந்திரங்களை ஜபிப்பது நன்று;கூடவே,நாம் மட்டும் உபதேசம் பெற்ற சிவமந்திரங்களையும் அங்கே ஜபிப்பது அவசியம்.சுவாதி நட்சத்திரம் ராகுவின்(பாம்புவின்) நட்சத்திரமாக இருப்பதால்,நமது மந்திர ஜபத்தின் பலன்கள் விரைவாக ஆதிசிவனைச் சென்றடையும்;நாம் அமர்ந்திருப்பதே ஆதி சிவனின் பாதத்தில்(அண்ணாமலையாரின் கோவிலில்)! இதனால் விரைவான சிவனருளும்,சொர்ணாகர்ஷணமும் நமக்குக் கிட்டும்;

 

( கிழக்குக்  கோபுர வாசலில் இரவு நேர அன்னதானத்தை முடித்துவிட்டு இரவு 7 மணிக்குள் அவரவர் ஊர்களுக்குப் புறப்பட்டுவிடலாம்;இரவுநேர அன்னதானத்திற்கு சைவ உணவாக நம்மால் முடிந்ததை வாங்கிக் கொடுத்துவிட்டுப் புறப்படலாம்) பிறகு இரவு 9 மணி முதல் 10 மணிக்குள் பள்ளியறை பூஜையிலும் கலந்து கொள்வது அவசியம்.

 

இத்துடன் சொர்ணாகர்ஷண கிரிவல நிகழ்ச்சிகள் நிறைவடையும்.வியாழக்கிழமை  இரவு அல்லது வெள்ளி  அதிகாலையில் நேராக நாம் வாழ்ந்து வரும் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.வேறு எந்தக் கோவிலுக்கும்,யார் வீட்டிற்கும் செல்லக் கூடாது.(சிலருக்கு வியாழக்கிழமை இரவே பேருந்து/ரயில் கிட்டாமல் போகலாம்;அவர்கள் அன்று  இரவு அண்ணாமலையில் தங்கிவிட்டுப்போவது நன்று.இதன் மூலமாக பலன்கள் வீணாகாது)

 

ஓம் சிவ சிவ ஓம்

   

ஓம் சிவசிவ ஓம்

 

ஓம் சிவசிவ ஓம்